--> -->

மன்னாரில் 27 மில்லியன் ரூபா பெறுமதியாக கஞ்சா கைப்பற்றப்பட்டது

செப்டம்பர் 26, 2021

மன்னார், வலைப்பாடு கடற்பிராந்தியம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர் 24,) மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது  சுமார் 90 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த பகுதியில் கடற்படையினர் மேற்கொண்டிருந்த தேடுதல் நடவடிக்கை காரணமாக கடத்தல்காரர்கள் அதிலிருந்து தப்பிக்க குறித்த தொகுதி கஞ்சாவினை கடற்கரையில் கைவிட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இரண்டு படகுகளுடன் நான்கு கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் வலைப்பாடு கடற்கரைப் பகுதியில் இருந்து மேலும் 86 கிலோவுக்கும் மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின்போது நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சுமார் 91 கிலோ 351 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என நம்பப்படுவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்படையினரின் இந்த தேடுதல் நடவடிக்கை கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.