--> -->

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஒக்டோபர் 02, 2021

ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான ககா, முரசமே மற்றும் பியுசுகி ஆகிய 3 நாசகாரி கப்பல்கள் இன்றைய தினம் (ஒக்டோபர் 02) நாட்டிற்கு வருகை தந்துள்ளன. இதற்கமைய, ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான குறித்த கப்பல்கள் நல்லெண்ணெ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்த அடைந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த ஜப்பானிய கடற்படை கப்பல்களுக்கு கடற்படைமரபுகளுக்கமைய மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

இந்த கப்பல்களில் 150 மீற்றர் நீளமுடைய பியுசுகி கப்பல் எரிபொருள் நிரப்பல் நடவடிக்கையின் பின்னர் நாளைய தினம் (ஒக்டோபர் 03)புறப்பட்டுச் செல்லவுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பல்களான 248 மீற்றர் நீளமுடைய ககா மற்றும் 151 மீற்றர் நீளமுடை முரசமே என்பன இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ஜா-லன் எக்ஸ்' எனும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயிற்சிகளை நிறைவு செய்த பின்னர் குறித்த கப்பல்கள் இரண்டும் எதிர்வரும் 4 ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட்டு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.