--> -->

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவக பாதுகாப்பு செயலமர்வில் கலாநிதி.சுப்ரமணியன் சுவாமி விஷேட உரை

ஒக்டோபர் 14, 2021

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் நேற்று மாலை (ஒக்டோபர்,13) ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு செயலமர்வில் விஷேட பேச்சாளராக இந்திய நாடாளுமன்றஉறுப்பினரும் கல்வியியலாளருமான கலாநிதி. சுப்ரமணியன் சுவாமி கலந்துகொண்டார்.

படைத்தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் பங்குபற்றிய இந்த பாதுகாப்பு செயலமர்வில் "21 ஆம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பு" தொடர்பாக கலாநிதி. சுவாமி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

21ஆம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பானது குறிக்கோள்கள், முன்னுரிமைகள், மூலோபாயம் மற்றும் வள அணிதிரட்டல் எனும் நான்கு பரிமாணங்களிலும் மாற்றமடைந்துள்ள விதம் குறித்து கலாநிதி.சுவாமி இதன்போது எடுத்துரைத்தார். இந்த மாற்றங்கள் முற்றிலும் ட்ரோன்கள், ரோபோக்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் கணினிகள் போன்ற இலத்திரனியல் மற்றும் சைபர் தொழில்நுட்பத்தில் உள்ள கண்டுபிடிப்புகளால் உருவானவை என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த யுகத்தில், போர் என்பது வெறுமெனே ஆயுத பயன்பாடு மற்றும் படைப்பலத்தை சார்ந்து இருக்கப்போவதில்லை, மாறாக இணைய வளங்களை பயன்படுத்தல் (ஒன்லைன் டொமைன்) ட்ரோன் கருவிகளின் பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரயோகம் ஆகியவற்றில் சார்ந்திருக்கும் என அவர் தெளிவுபடுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சின் நந்தமித்ர கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த பாதுகாப்பு செயலமர்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு ) தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்னவினால் எழுதப்பட்ட "தி ரோட் டு நந்திக்கடால்", "கோட்டாபய" ஆகிய இரண்டு புத்தகங்கள் நினைவுப் பரிசாக கலாநிதி. சுவாமியிடம் வழங்கப்பட்டது.

இந்த அமர்வு தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ரோஹான் குணரத்ன தொகுத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.