கடலோர பாதுகாப்பு படையினரால் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைப்பு கூட்டம் முன்னெடுப்பு

நவம்பர் 27, 2021

இலங்கை மற்றும் பங்களாதேஷ் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலை தடுத்தல் தொடர்பான ஒரு ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் மற்றும் பங்களாதேஷ் நாட்டு பிரதிநிதிகள் மிரிஸ்ஸாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு அண்மையில் விஜயம் செய்தனர்.

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலக பிரதிநிதிகள் குழுவிற்கு உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டத்தின் தலைவர் திரு. அலன் கோல் தலைமை தாங்கிய அதேவேளை, பங்ளாதேஷ் தூதுக்குழுவிற்கு உள்துறை அமைச்சின் பொது பாதுகாப்பு பிரிவின் மேலதிக செயலாளர் திரு. ஜீஎஸ்எம் ஜபர் உல்லா தலைமை தாங்கினார்.

கடலில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து இந்த கலந்துரையாடலில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டதாக கடலோர பாதுகப்பு படை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தக் கலந்துறையாடலில், தகவல்களைப் பகிர்வதன் முக்கியத்துவம், இரு நாடுகளுக்கிடையில் தொடர்பு மையத்தை ஸ்தாபித்தல், இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துறையாடப்பட்டதாக கடலோர பாதுகப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, கடல்சார் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் எதிர்கால ஒத்துழைப்பை எளிதாக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.