--> -->

கிழக்கில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று புதிய உறுப்பினர்கள் நியமனம்

நவம்பர் 30, 2021

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று புதிய உறுப்பினர்கள் நேற்று (நவம்பர் 29, 2021) வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளியிடப்பட்டுள்ள விஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அளவையியலாளர் நாயகம் ஆரியரத்ன திஸாநாயக்க, ஓய்வுபெற்ற பிரதம செயலாளர் ஏ. பத்திநாதன் மற்றும் விரிவுரையாளர் முஃபிசல் அபூபக்கர் ஆகியோர் இந்த ஜனாதிபதி செயலணியின் புதிய உறுப்பினர்களாக உள்ளனர்.

அளவையியலாளர் நாயகம் திஸாநாயக்க, அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் அளவையியலாளர் நாயகம் டபிள்யூ.டி.எம்.எஸ்.பி.தென்னகோன் என்பவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களின் அமைப்பை விரிவுபடுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33வது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ், பாதுகாப்புச் செயலாளரைத் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணி 2020ம் ஆண்டு ஜூன் 2ம் திகதி நியமிக்கப்பட்டது.