--> -->

இராணுவத்தினரால் இரு முன்னாள் போராளி குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணம்

டிசம்பர் 01, 2021

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அல்லது அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக, யாழ் குடாநாட்டில் அல்வாய் மற்றும் தும்பளை ஆகிய இடங்களில் மேலும் இரண்டு வீடுகளை நிர்மாணிப்பதற்கு யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தின் இந்த முயற்சியின் மூலம் முன்னாள் போராளிகளான திருமதி தர்சன் யோகேஸ்வரி மற்றும் திருமதி நிரோஜன் யோகம் ஆகியோரின் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற இருவேறு நிகழ்வுகளின் போது யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இரண்டு வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

இராணுவத்தினரால் பயனாளி குடும்பங்களின் பிள்ளைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பன பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் விநியோகிக்கப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த வீடுகள் இராணுவத்தினரின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தினால் நிர்மாணிக்கப்படும் அதேவேளை கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் குழு மூலப்பொருட்களுக்கான நிதியை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.