--> -->

சிவில் பாதுகாப்பு படை திணைக்களத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட சேதன உரம் லக்பொஹொர உரக் கூட்டுத்தாபனத்திடம் கையளிப்பு

டிசம்பர் 02, 2021

சிவில் பாதுகாப்பு படை திணைக்களத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட சேதன உரத்தின் ஒரு தொகுதி அண்மையில் அரசுக்குச் சொந்தமான லக்பொஹொர உரக் கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்பட்டது.

இதற்கமைய, திருகோணமலையில் உள்ள சிவில் பாதுகாப்பு படையினரால் உற்பத்தி செய்யப்பட்ட 7600 கிலோகிராம் சேதன உரம் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் லக்பொஹொர உரக் கூட்டுத்தாபனத்தின் கந்தளாய் களஞ்சியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் வியாபித்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் படையணிகள் மற்றும் 24 பயிற்சிப் பாடசாலைகளில் சேதன உர உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் 1,064,000 கிலோகிராம் சேதன உரங்களை உற்பத்தி செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 4,000,000 கிலோகிராம் சேதன உரங்களை உற்பத்தி செய்ய சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் எதிர்பார்க்கிறது.

ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாகவும், சிவில் பாதுகாப்பு படை திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என் ஆர் லமாஹேவகே (ஓய்வு) வழிகாட்டுதலின் கீழும் சிவில் பாதுகாப்பு படை திணைக்களத்தினால் சேதன உர உற்பத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.