--> -->

லெபனானிலுள்ள இலங்கை படையினருக்கு பதக்கங்கள் அணிவிப்பு

டிசம்பர் 16, 2021

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைகளுடன் இணைந்து பணியாற்றிவரும் இலங்கை படையினரின் முன்மாதிரியான சேவைகளை பாராட்டி பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு லெபனானின் நகோரா நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிகாக்கும் படைகளின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

லெபனானில் சேவையாற்றும் லெப்டினன் கேர்ணல் ஆர்.எஸ் படகல்ல தலைமையிலான இலங்கைக் குழுவின் அழைப்பின் பேரில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்கான தூதரகத்தின் தலைவரும் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஸ்டெபானோ டெல் கேல் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெபனான் மற்றும் சிரியாவுக்கான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தூதுவர் திருமதி ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன, லெபனான் ஆயுதப் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஐ.நா. அமைதிகாக்கும் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதக்கம் அணிவிக்கும் நிகழ்வில் இலங்கை இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவத்தின் பிரதம அதிகாரியும் இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர். வருகை தந்த அதிகாரிகளுக்கு அமைதிகாக்கும் படை முகாமிலிருக்கும் இலங்கை படைகளின் தளபதி லெப்டினன்ட் கேணல் ஆர்.எஸ் படகல்லவினால் வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது.