--> -->

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு தேவையான குடும்பத்திற்கு கையளிப்பு

டிசம்பர் 29, 2021

இலங்கை இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, மட்டக்களப்பு, கெவிலியா மடு, மங்களகமவில் உள்ள திருமதி ஏ.எம்.நந்தினி குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது. இதற்கமைய அண்மையில் இடம்பெற்ற புதுமனை குடிபுகு விழாவின் போது இந்த வீட்டின் சாவி கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறியால் கையளிக்கப்பட்டது.

உளவளநிபுணரும், விரிவுரையாளர் மற்றும் எழுத்தாளருமான மறைந்த சந்தன குணவர்தனவின் நிதியுதவியின் கீழ் இலங்கை சிங்க ரெஜிமெண்டின் 11வது படையணி வீரர்களின் மனித வளம் மற்றும் நிபுணத்துவத்துடன் இந்த வீட்டின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதுமனை குடிபுகு விழாவில் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது பயனாளிக்கு வீட்டு பாவனைப்பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.