--> -->

ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக இராணுவத்தின் 8வது குழுமத்தின் முதற்குழு தென் சூடான் நோக்கி பயணம்

டிசம்பர் 29, 2021

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக தென்சூடானில் நிறுவப்பட்டுள்ள 2ம் நிலை இராணுவ பராமரிப்பு வைத்திசாலையான சிறிமெட் வைத்தியாலையில் பணியாற்றுவதற்காக தயாராகவுள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் 8 வது இராணுவ படைக் குழுவின் முதலாவது குழுவினர் இன்று (டிசம்பர், 29) அதிகாலை தென்சூடான் நோக்கி பயணமானார்கள்.

ஐ நா அமைதிகாக்கும் பணிகளுக்காக பயணமாகும் படையினருக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தற்போதும் பணியில் ஈடுபட்டிருக்கும் குழுவினர் 31 ஜனவரி 2022 நாடு திரும்ப உள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழு தளபதி லெப்டினன்ட் கேர்ணல் என்.எம் நிப்லர் தலைமையில் தென் சூடானுக்கு செல்லும் 8 வது படைக் குழுவில் மருத்துவ நிபுணர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட 66 இராணுவ வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்த குழுவில் கள தலைமை பொறுப்பதிகாரி, தாதியர், அவசர சிகிச்சை தாதியர் (மகளிர் மருத்துவம்), சத்திர சிகிச்சைக் கூட தொழிநுட்பவியலாளர், பிசியோதெரபிஸ்ட்கள் (டிபிஎம்), ரேடியோகிராஃபர், எக்ஸ்ரே தொழிநுட்பவியலாளர்கள், ரேடியலஜிஸ்ட், பல் மருத்துவர் மற்றும் பல் உதவியாளர், பல் தொழிநுட்பவியலாளர், மருத்துவ களஞ்சிய பொறுப்பாளர்கள், மருந்தக பொறுப்பாளர், மருந்தகவியலாளர், ஆய்வு கூட தொழிநுட்பவியலாளர்கள், தகவல் தொடர்பு தொழிநுட்பவியலாளர்கள், சுகாதார உதவியாளர், நிர்வாக எழுதுவினைஞர், சமையல்காரர்கள், அம்பியுலன்ஸ் சாரதிகள், சுகாதாரப் பணியாளர்கள், பிரேத அறை உதவியாளர் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை இராணுவ மருத்துவப் படையணி வீரர்கள், இலங்கை சமிக்ஞைப் படையணி வீரர்கள், பொறியியலாளர் சேவைப் படையணி வீரர்கள், இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி வீரர்கள் மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணி வீர்கள் உள்ளடங்குவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் சூடானிலிருக்கும் மேற்படி போர்கள நடவடிக்கைகளின் போது பயன்படுத்த உகந்த வகையிலான சிறிமெட் வைத்தியசாலையானது, அறுவை சிகிச்சை பிரிவு, பணியாளர்கள் ஓய்வறை, தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, பல் அறுவை சிகிச்சை பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, மருந்தகம், மருந்து கலஞ்சியம் உள்ளிட்ட இரண்டாம் நிலை மருத்துவச் சேவைகளுக்குத் தேவையான சகல வசதிகளையும் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். அத்துடன் இவ்வைத்தியசாலையில் கதிரியக்கவியல் துறை, மருத்துவ ஆய்வகம், அவசர சிகிச்சைப் பிரிவு, தொற்று நீக்கம் செய்யும் பிரிவு, உயிரியல் மருத்துவப் பொறியியல் பிரிவு, மருத்துவக் கழிவகற்றல் பிரிவு, பிணவறை, தனிமைப்படுத்தல் வார்டுகள் மற்றும் சலவைக் அறை மற்றும் நடைப் பயிற்சி மற்றும் சுவாச திறன்கள் தொடர்பிலான சிக்கல்களுக்கு சிகிச்சை அளிக்ககூடிய ஏரோ-மெடிக்கல் வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த வைத்தியசாலை இலங்கை படையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற அதேநேரம் இதுவரையில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 7 குழுக்களும் ஐநாவின் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

மேற்படி குழுவினரை தென் சூடானுக்கு ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக வழியனுப்பிவைக்கும் நிகழ்வில் இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.