--> -->

கைப்பற்றப்பட்ட 6 மெட்றிக் தொன் கஞ்சா விமானப்படை
ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது

ஜனவரி 07, 2022

விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாவிலிருந்து சுமார் 6 மெட்றிக் தொன் கஞ்சா விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

அம்பாறை, குமண பாதுகாப்பு வனாந்திரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையே எம்.ஐ 17 ரக ஹெலிகப்படர் மூலம் சஹஸ்ரவெலி விஷேட அதிரடிப்படைப் படை முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்ஹ தெரிவித்தார்.

இலங்கை விமானப் படையின் வரலாற்றில் முதற் தடவையாக இவ்வாறு கஞ்சா ஹெலிகொப்டர் மூலம் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவின் ஆலோசனைக்கமைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் வழிகாட்டலில் எம்ஏ-60 ரக விமானத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வான் வழி கண்காணிப்பு நடவடிக்கையின் பிரதிபலனாக கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

எம்ஏ-60 ரக விமானம் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சட்டவிரோத கஞ்சா செய்கை தொடர்பில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு விமானப்படை மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் 5788 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அவை கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் எம்.ஐ 17 ரக ஹெலிகப்படர் மூலம் சஹஸ்ரவெலி விஷேட அதிரடிப்படைப் படை முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.