--> -->

18 மணிநேரம் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் மீட்பு

ஜனவரி 10, 2022

பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்து கடலில் விழுந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை நேற்று (ஜனவரி, 09) மீட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் உதவியுடன் மீட்புப் பணி செயற்படுத்தப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடற்படையின் விரைவு பயணிகள் கப்பல் ஒன்று கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்து மேலதிக வைத்திய சேவைகளுக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தது.

விபத்தில் சிக்கிய மீனவர் 18 மணி நேரத்திற்கும் மேலாக நீரில் மூழ்கி மீட்புக்காக காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (07) காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பல நாள் மீன்பிடி படகு மூலம் கடலுக்குச் சென்ற ஆறு மீனவர்கள் குழுவில் அவரும் அடங்குவார். அவர் கடலில் விழுந்து மறுநாள் தங்காலையில் இருந்து எட்டு கடல் மைல் தொலைவில் காணாமல் போயிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள மீன்பிடி கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்களுக்கு அடையாளம் காணுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.