--> -->

மறைந்த முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் பி.எச்.மென்டிஸின் இறுதிச் சடங்கு முழு இராணுவ மரியாதையுடன் இடம்பெற்றது

ஜனவரி 20, 2022

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) காலமான இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி எயார் சீப் மார்ஷல் பி.எச்.மென்டிஸின் பூதவுடல் பூரண இராணுவ மரியாதையுடன் புதன்கிழமை (ஜனவரி, 19) நல்லடக்கம் செய்யப்பட்டது. தெஹிவளை - கல்கிசையில் உள்ள ‘நிசல செவன’ மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எயார் சீஃப் மார்ஷல் பத்மன் ஹரிபிரசாத மெண்டிஸ் (ஓய்வு) இலங்கை விமானப்படையின் முதலாவது தளபதி ஆவார்.
 
1933 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி பிறந்த அவர், 1951ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிதாக உருவாக்கப்பட்ட ரோயல் சிலோன் விமானப்படையின் ஐந்தாவது ஆட்சேர்ப்பில் இணைந்து கொண்டு பிரிட்டனில் பயிற்சி பெற்றார். தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளராகப் பயிற்சி பெற்ற முதல் இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1971 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி ரோயல் சிலோன் விமானப்படையின் 4 வது தளபதியாக பதவி உயர்வு பெற்ற்று, ரோயல் சிலோன் விமானப்படைக்கு கட்டளை வழங்கிய முதல் இலங்கை அதிகாரியும் ஆவார். பின்னர் நாடு குடியரசாக மாறியதும், இலங்கை விமானப்படை என அழைக்கப்பட்ட ரோயல் சிலோன் விமானப்படைக்கு எயார் சீப் மார்ஷல் பி.எச்.மென்டிஸ் இலங்கை விமானப்படையின் முதல் தளபதியானார்.

மறைந்த எயார் சீப் மார்ஷல் மெண்டிஸின் உடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை காலை இறுதி அஞ்சலியை செலுத்தினார். ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஆகியோரும் மறைந்த இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.