--> -->

மாலியில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படைக்குழுவின் விலைமதிப்பற்ற சேவைகளுக்கு பாராட்டு

பெப்ரவரி 14, 2022

ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படைக்குழுவின் விலைமதிப்பற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற பதக்க அணிவகுப்பு நிகழ்வில் ஐ.நா பொதுச்செயலாளரின் விஷேட பிரதிநிதியும், மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைந்த பல பரிமாண நடவடிக்கையின் தலைவருமான திரு. எல்-காசிம் வான் கலந்து கொண்டார்.

மாலியில் தமது சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பவுள்ள இலங்கை படை குழுவின் மரியாதை அணிவகுப்பினை ஐ.நா பொதுச் செயலாளரின் விஷேட பிரதிநிதி ஏற்றுக்கொண்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மாலியில் ஐ.நா. அமைதிகாக்கும் தளங்களுக்கான விநியோக செயற்பாட்டில் இலங்கை படைக் குழுவினர் சிறந்த பங்களிப்புக்களை வழங்கி வருவவதாகவும் இலங்கை இராணுவ குழுக்கள் மாலியில் ஆற்றிவரும் நடவடிக்கைகள் விலைமதிப்பற்றவை எனவும் ஐ.நா பொதுச் செயலாளரின் விஷேட பிரதிநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

திரு எல்-காசிம் வானேவின் டுவிட்டர் பதிவிற்கு பின்னூட்டம் ஒன்றை பதிவிட்டுள்ள மாலியில் ஐநா அமைதிகாக்கும் பணிகளின் கிழக்கு பிரிவின் தளபதி ஸ்டீபன் ஜே அன்டெர்ஸன், இலங்கை அமைதிகாக்கும் படைக் குழு மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த வீரர்களை கொண்டு செயற்படுவதையிட்டு தாம் பெருமிதம் அடைவதாக குறிப்பிட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலியில் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் 3வது படைக்குழுவில் இலங்கை இராணுவத்தின் 20 அதிகாரிகளும் 223 படைவீரர்களும் பங்களிப்பு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.