--> -->

சட்ட விரோத செயல்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்

மே 11, 2022

• இந்த நாட்டில் எவருக்கும் தீங்கு செய்ய யாருக்கும் இடமில்லை

• சட்டவிரோத நோக்கங்களுக்காக சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்த வேண்டாம்

• வெளிநாட்டுப் படைகளின் ஈடுபாடு தேவையில்லை - இராணுவத் தளபதி

தாக்குதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் தீ வைப்பு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் எதிராக எந்தவொரு அரசியல் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சில் இன்று (11) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்தனர்.

சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டிய அவர், குற்றச் செயல்கள் தொடர்பான அனைத்து வீடியோ காட்சிகளையும் நாங்கள் சேகரித்துள்ளோம், அவற்றை பகுப்பாய்வு செய்த பிறகு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டார் .

அரசியலமைப்பையும் அனைத்து குடிமக்களையும் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்பதால், நாட்டில் எவருக்கும் தீங்கு விளைவிக்க யாருக்கும் இடமில்லை என்று அவர் மேலும் கூறினார்.

" கோவிட் தொற்றுநோய் மற்றும் ஆசிரியர் வேலைநிறுத்தம் ஆகியவற்றால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர்களின் கல்வியைத் தொடர வழிவகுக்குமாறு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்", என வேண்டுகோள் விடுத்தார்.

சட்டவிரோத நோக்கங்களுக்காக சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மற்றவர்களை வரவழைக்க அவற்றை உபயோகிக்க வேண்டாம் என வலியுறுத்திய அவர் அவ்வாறான சமூக வலைத்தள செயற்பாடுகள் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் " என்றும் கூறினார்.`

பொதுச் சொத்துக்களைத் திருடுவோர் அல்லது தனிநபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஒன்பது ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

அண்மைய வன்முறைகள் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போது மொத்தம் 219 பேர் காயமடைந்துள்ளனர், 41 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, 61 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, 136 சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என அவர் தெரிவித்தார்.

"தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை நீக்கப்படும்" என்று அவர் கூறினார், "சில சிறிய சம்பவங்களைத் தவிர இன்று வன்முறைகள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"சட்டவிரோத சம்பவங்கள் தொடர்ந்தால் ஊரடங்கு உத்தரவு மாறாமல் இருக்கலாம்" என்றும் "எதிர்வரும் காலங்களில், எந்நேரத்திலும் எழக்கூடிய எந்த சம்பவத்தையும் எதிர்கொள்ள பாதுகாப்பு துறையினர் சட்டத்தை அமுல்படுத்த தயாராக உள்ளனர்" என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் தனது கவலைகளை தெரிவித்த ஜெனரல் குணரத்ன, பாதுகாப்பு மற்றும் அசௌகரியம் இரண்டும் இரு வேறு அம்சங்களாகும் எனவும், அதனால் இயல்பு நிலை திரும்பும் வரை சிறிது காலம் பொறுமையுடன் செயல்படுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துத்தார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புப் படைகளின் பிரதம பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, "நாங்கள் நன்கு அனுபவம் வாய்ந்த படைகள், நாங்கள் எங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் நாட்டைப் பாதுகாப்பதில் முழுத் திறன் கொண்டவர்கள், எனவே எங்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட எந்த வெளிநாட்டு படைகளும் இங்கு வர வேண்டிய தேவை இல்லை " என்று கூறினார். "தொழில்ரீதியாக-தகுதியுள்ள முப்படை வீரர்களாக எங்கள் சொந்த பாதுகாப்பு விவகாரங்களை நாங்கள் முழுமையாக நிர்வகிக்க முடியும்" எனவும் மேலும் கூறினார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் இருப்பதாக உறுதிப்படுத்தினார்.

இயல்பு நிலை திரும்பியவுடன் முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்திற்கு அனுப்பப்படுவார் என்றும் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.