--> -->

அமெரிக்க ஆட்கடத்தல் அறிக்கை TIP 2022 இன் பிரகாரம் இலங்கை அடுக்கு 2 க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது

ஜூலை 20, 2022

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் 2022 ஜூலை 19 வெளியிடப்பட்ட ஆட்கடத்தல் தொடர்பான (TIP) அறிக்கை 2022இன் பிரகாரம் இலங்கையை அடுக்கு 2 ற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணிக்கு (NAHTTF) தலைமை வகிக்கும் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றது.

இலங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக அடுக்கு 2 கண்காணிப்பு பட்டியலில் தொடர்ந்து இருந்த நிலையில் அடுக்கு 3 க்கு தரமிறக்கப்படக்கூடிய நிலையில் அமெரிக்க உதவி மற்றும் பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளின் உதவிகள் பெறுவதில் சில கட்டுப்பாடுகள் இருந்த நிலை காணப்பட்டது.

 ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாக்கும் அமெரிக்க சட்டத்தின் (TVPA) பிரகாரம் தயாரிக்கப்பட்ட ஆட்கடத்தல் (TIP) அறிக்கையானது, மனித கடத்தல் தொடர்பில் வெளிநாட்டு அரசாங்கங்களுடன் தொடர்புகொள்ள அமெரிக்க `அரசாங்கத்தின் முக்கிய இராஜதந்திர கருவியாக கருதப்படுகிறது. மேலும் ஆட்கடத்தலுக்கு எதிரான முயற்சிகளின் உலக நாடுகளுக்கு மத்தியிளுள்ள மிகவும் விரிவான ஆதாரமாகவும் இது அறியப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச தரங்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அவதானிக்கும் அதேவேளை (அடுக்கு 1 இல் இடம்பெற தேவைப்படும்) அது தொடர்பில் இலங்கை கணிசமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அங்கீகரித்துள்ளது. முந்தைய அறிக்கையிடல் காலத்துடன் ஒப்பிடுகையில், அதன் ஆட்கடத்தல் எதிர்ப்புத் திறனில் கோவிட 19 இன் தாக்கத்தை கருத்தில் கொண்டு, முயற்சிகள் அதிகரித்துள்ளன.

தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின் உறுப்பினர்களான வெளிவிவகார அமைச்சு; நீதி அமைச்சு; தொழில் அமைச்சு; சட்டமா அதிபர் திணைக்களம்; வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் முன்னாள் இராஜாங்க அமைச்சு; மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு; சுற்றுலா அமைச்சு; சமுர்த்தி இராஜாங்க அமைச்சு; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்; தொழில் திணைக்களம், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம்; இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்; நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்; குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபை; குற்றப் புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவு; கொழும்பு பிரதம சட்ட மருத்துவ அதிகாரி: மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின் தலைவரான, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நியமித்த அதிகாரிகள் குழுவின் தலைமையை வகிக்கும் தேசிய புலனாய்வுப் பிரதானியின் அலுவலகத்தின் கீழ் தேசிய மூலோபாய செயல் திட்டம் 2021 - 2025 இற்கமைய இலங்கையில் ஆட்கடத்தலை கண்காணித்து எதிர்த்துப் செயற்பட மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஒன்றுபட்ட உணர்வுடனும் பணியாற்றினர்.

ஆட்கடத்தல் அறிக்கை முன்னுரிமைப்படுத்தியுள்ள பரிந்துரைகளை தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி முழுவதுமாக அடைவதற்கும் ஆட்கடத்தல் குற்ற நடவடிக்கைகளை நாட்டிலிருந்து ஒழித்துக்கட்ட முழு அர்ப்பணிப்புடன் செயல்படும்.