--> -->

'9வது கொழும்பு பாதுகாப்பு மாநாடு' வியாழக்கிழமை ஆரம்பம்...

ஆகஸ்ட் 27, 2019

இலங்கை இராணுவத்தின் வருடாந்த சர்வதேச பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2019' எதிர் வரும் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட்,29) இடம்பெறவுள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது வருடமாகவும் இடம்பெறும் இரண்டு நாட்களைக்கொண்ட இம்மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.

இச் சர்வதேச மாநாடு "தற்கால பாதுகாப்பு சூழலில் மாறிவரும் இராணுவ சிறப்பியல்பு". எனும் தொனிப்பொருளில் இம்மாதம் 29ம் மற்றும் 30ம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு பங்காளர்கள், மூலோபாயவாதிகள், கொள்கை வகுப்பாளர்கள், பாதுகாப்பு நிபுணர்கள், புத்திஜீவிகள், பாதுகாப்பு ஆய்வாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிற சிறப்பு அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ள இம்மாநாட்டில் 13 வெளிநாட்டு மற்றும் 14 உள்நாட்டு பேச்சாளர்கள் கருப்பொருள் தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர். இவ் ஆண்டு 40 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம் மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரண்டு நாட்கள் இடம்பெறும் இச் சர்வதேச மாநாட்டில் ஒன்பது அமர்வுகள் இடம்பெறவுள்ளன. ‘சமகால பாதுகாப்பு சூழல்: மோதல் அல்லது ஒத்துழைப்பு’, ‘பயங்கரவாதத்தை எதிர்கொள்ளல்’, ‘இராணுவ நவீனமயமாக்கல்’ மற்றும் ‘சமகால பாதுகாப்பு சூழலில் இராணுவ தயார்நிலை’ உள்ளிட்ட கருப்பொருள் தலைப்புகளில் விளக்கக்காட்சிகள், கருத்தாடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் என்பன இடம்பெறவுள்ளன.

இச் சர்வதேச மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (ஆகஸ்ட்,26) கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.