--> -->

பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க எவருக்கும் அனுமதி இல்லை - பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்

செப்டம்பர் 26, 2022

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான மக்களின் உரிமையை அரசு மதிக்கிறது. எவ்வாறாயினும், போராட்டங்கள் சொத்துக்களை அழிக்கவோ அல்லது பொதுமக்களின் அமைதியான அன்றாட வாழ்க்கையை பாதிக்கவோ இடமளிக்க முடியாது.

பொதுமக்களின் அமைதியான அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடத்தப்படும் முறையற்ற ஆர்ப்பாட்டங்களை சட்டரீதியில் முறியடிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (செப் 26) காலை இடம் பெற்ற நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலமை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இவ்வாறு தெரிவித்தார்.

எந்த ஒரு போராட்டம் நடத்துவதாயின் அது தொடர்பில் சுமார் 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் பாதுகாப்பு தரப்பினருக்கு உரிய முறையில் அறிவித்து அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் தற்பொழுது நடைபெறும் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இந்த சட்ட விதிமுறைகளை பின்பற்றவில்லை.

நாட்டில் எத்தகைய சூழ்நிலை ஏற்பட்டாலும், எந்தவொரு தரப்பினரும் பொறுப்பற்ற முறையில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எந்தவொரு நாடும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் சட்ட விதிமுறைகள் ஆகியவை முக்கிய அம்சகளாகும். சட்டத்தின் விதிமுறைகளை மீறினால் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியாது.

நாட்டில் அமைதியை சீர்குலைக்க யாருக்கும் இடமில்லை. எனவே, இந்த நிலைமையை புத்திசாலித்தனமாகப் புரிந்துகொண்டு, நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கூட்டாகச் செயற்படுமாறு எமது நாட்டுப் பொது மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் தினித் சின்தக கருணாரட்ன தலைமையில் நடைபெற்ற இந்த விஷேட செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் நிஹால் தல்துவ ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பான இரண்டு முக்கிய நிருவனங்களான பாதுகாப்பு அமைச்சும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்.

மேலும், ஜனாதிபதி செயலகம் போன்ற அரச கட்டிடங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை முறையாக செய்ய முடியாத சூழ்நிலைகளின் போது அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்பு துறை நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, நாட்டின் ஸ்திரத்தன்மையை முன்னோக்கிய பயணத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு பொலிஸாருக்கு சகல ஆதரவையும் வழங்குவதற்கு பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் உறுதியளித்தார்.