--> -->

மழையுடனான வானிலை தொடரும் வாய்ப்பு

செப்டம்பர் 30, 2022

இன்று (30) நண்பகல் 1200 மணிக்கு வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை வார இறுதி நாட்களிலும் தொடரக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.

மேல்,  சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். மேலும், சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவுக்கு கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு, வடமத்திய, தென் மாகாணங்களிலும் காற்றானது மணித்தியாலத்துக்கு சுமார் 50 கி.மீ. வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.