--> -->

இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பொறியியல் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான சூழலை எளிதாக்கும் - பாதுகாப்பு செயலாளர்

ஒக்டோபர் 14, 2022
  • இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (CMETSL) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
  •  முப்படைகளின் பொறியியலாளர்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒரு தொழில்முறை அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.  

முப்படை வீரர்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பணியை செயற்படுத்தி வருகின்றனர், மேலும் முக்கியமாக இராணுவப் பொறியியலாளர்களால் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய அளவிலான திட்டங்களுக்கு அவர்களின் முழு பங்களிப்பையும் வழங்கி வருகின்றனர்.

இலங்கையில் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கான கூட்டு முயற்சியை நோக்கி நாம் கவனம் செலுத்தியுள்ள நிலையில், முப்படைகளிலுள்ள  பொறியியலாளர்களை ஒரு நிபுணத்துவ அமைப்பின் கீழ் முறையாக ஒழுங்கமைத்து, அவர்களுக்குத் தேவையான தொழில்முறை அங்கீகாரத்தை வழங்கும் அதே வேளை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களின் நிபுணத்துவத்தை திறம்படப் பெற்றுக்கொள்ள முடியும்.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று மாலை (ஒக்டோபர் 13) அத்திடிய, ஈகிள்ஸ் லேக்சைட் மண்டபத்தில், இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக இலங்கை பொறியியல் சபையின் தலைவர் பொறியியலாளர் திலக் டி சில்வா கலந்து கொண்டார்.

இலங்கையின் முப்படை மற்றும் சிவில் பொறியியலாளர்கள் சங்கங்களின் பொறியியல் வல்லுநர்கள் மத்தியில் சிறந்து விளங்குவதற்கான இந்த வகையான கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பாராட்டிய ஜெனரல் குணரத்ன, நாட்டின் பொறியியல் துறை வரலாற்றில் அதன் முன்னேற்றத்திற்காக கைகோர்த்த அனைத்து தரப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இராணுவத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டின் நலனுக்காகவும் பொறியியல் தீர்வுகளை உருவாக்கவும் முப்படைகளின் பொறியியல் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கு சூழலை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைத்துக் கொடுக்கும் என்று தாம் எதிர்பார்பதாக பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

"ஒரு புதிய தொழில்முறை அமைப்பை உருவாக்குவதானது திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும், பல்வேறு நோக்கங்களுக்கா ஒத்துழைப்புக்கும் கல்லூரி ஒழுங்குவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இது திறம்பட உதவும். இந்த சூழலில், இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியானது பாரம்பரிய முறையிலிருந்து கணிசமாக வேறுபட்ட ஒரு தொழில்முறை பொறியியல் மேலாண்மை அணுகுமுறையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

இராணுவப் பொறியியல் துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாதுகாப்புச் செயலாளர், தகவல் யுத்தம் மற்றும் மரபு முறையற்ற அச்சுறுத்தல்கள் உட்பட நவீன முறையற்ற யுத்த அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள இராணுவப் பொறியியலில் துறையில் இப்புதிய அங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சிறப்புரையாற்றினார். விழாவின் போது மேற்படி கல்லூரியின் இணையதளமும் ஆரம்பித் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவரினால் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, கௌரவ விருந்தினரான பொறியியலாளர் திலக் டி சில்வா, பிரதம பேச்சாளர் பேராசிரியர் கபில பெரேரா மற்றும் முக்கிய சிரேஷ்ட அதிகாரிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

விழாவின் தொடக்கத்தில் இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க வரவேற்பு உரையை நிகழ்த்தினார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு,  இலங்கை விமானப்படை பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ,  இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, இலங்கை பொறியியல் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கமல் லக்சிறி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரேணுக ரோவல், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.