--> -->

நாட்டைக் கட்டியெழுப்பும் ஒரு பகுதியாக நாங்கள் மதச் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம் - பாதுகாப்புச் செயலாளர்

நவம்பர் 05, 2022

நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக முடியுமான சந்தர்ப்பங்களில் புனித விகாரைகளின் மறுசீரமைப்புத் திட்டங்களிலும் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

மாத்தறை பலாடுவ பௌதோதய விகாரையில் நேற்று (நவம்பர் 04) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அனுராதபுரம் சந்தஹிரு சேய, மிஹிந்தலை மிஹிந்து மஹா சேய ஆகியவைகளின் புனரமைப்பு பணிகள், கிழக்கு மாகாணத்தில் உள்ள திகவாபிய மற்றும் நீலகிரிய ஸ்தூபி புனரமைப்புத் திட்டங்கள் என்பன தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாத்தறை, பலாடுவ பௌதோதய விகாரையில் நடைபெற்ற ‘விகாரை மண்டபம்’ மற்றும் ‘புத்தச்சிலை’ திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜெனரல் குணரத்ன இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

விகாரையின் பிரதமகுரு வணக்கத்துக்குரிய கடமன்னே குணானந்த தேரரின் அழைப்பின் பேரில் மல்வத்து பீடத்தின் துணை தேரர் வணக்கத்துக்குரிய கலாநிதி நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதசிறி தேரர் அவர்களினால் விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபம் மற்றும் புத்தர்சிலையையும் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதம தேரர் வண. குணானந்த தேரர், மகா சங்கத்தினர் மற்றும் சிறப்பு அதிதிகளை வரவேற்று சமய சடங்குகளை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, பெப்பிலியான சுனேத்திரா தேவி விகாரையின் பிரதம மதகுரு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தலைமையில் சமய சொற்பொழிவு இடம்பெற்றது.

இந்த உன்னத திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உழைப்பை இலங்கை இராணுவம் வழங்கியதாகவும் பாதுகாப்பு செயலாளர் தனது உரையின் போது குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், வணக்கத்துக்குரிய மகாசங்கத்தினர், புரவலர்கள், ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள், பக்தர்கள், பிரதேசவாசிகள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.