--> -->

படைவீரர்கள் நினைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

நவம்பர் 13, 2022

இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வு இன்று காலை (நவம்பர்,13) கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு வருகைதந்த பாதுகாப்புச் செயலாளரை, இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேரா வரவேற்றார்.

பிரதம அதிதி, படைத் தளபதிகள், முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பிரமுகர்களும் கலந்து கொண்டு நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன்போது முன்னாள் இராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து படைவீரர்களின் நினைவாக பொப்பி தினம் என பிரபலமாக அறியப்படும் இந்த ஞாபகார்த்த தின நிகழ்வு வருடாந்தம் முன்னாள் படைவீரர்கள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த நிகழ்வில், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி, இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் உத்தியோகஸ்தர்கள், சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.