--> -->

இரு கடற்படை கப்பல்கள் கடற்படை கூட்டுப்பயிற்சியில் (‘SLINEX- 2019’) பங்கெடுக்க இந்தியா பயணம்

செப்டம்பர் 06, 2019

இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து பங்குகொள்ளும் 2019ஆம் ஆண்டுக்கான இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான “சிந்துறால” மற்றும் “சுரநிமால” ஆகிய இரண்டு கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி நேற்று (செப்டெம்பர், 05) பயணித்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற இரு கப்பல்களும் எதிர்வரும் சனிக்கிழமை 07ஆம் திகதி இந்திய துறைமுகமான விசாக பட்டிணத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் 07ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இவ்வருடத்திற்கான (2019) கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக கடற்படை கப்பல் கொடிவரிசை அதிகாரி, ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா உட்பட 323 கடற்படை வீரர்களும் பங்குகொள்ளவுள்ளனர்.

இவ்விரு கப்பல்களையும் சம்பிரதாய பூர்வமான வழியனுப்பும் நிகழ்வில், கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி, ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டுப் பயிற்சியானது இரு நாட்டு கடற்படை வீரர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் செயல் திறனை மேலும் வலுப்படுத்தவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இக்கூட்டுப் பயிற்சியின் மூலம் இரு நாட்டு கடற்படையினரும் இந்து சமுத்திரத்தின் கடற் பிராந்திய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒத்திகை பார்ப்பதற்கும், திறம்பட செயற்படுத்துவதற்கு தேவையான திறன்களை பெற்றுக்கொள்வதற்கும், தமது சொந்த திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது