--> -->

இலங்கையில் சுனாமி அனர்த்தத்தின் 15 வருட ஞாபகார்த்த தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

டிசம்பர் 26, 2019

இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (டிசம்பர், 26) 15 வருடம் பூர்த்தியடைகின்றது. இதனை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் நாட்டின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு ஞாபகார்த்த தின நிகழ்வுகளும் சமய அனுஷ்டானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

2004ஆம் ஆண்டு இலங்கையை தாக்கிய சுனாமி அனர்த்தத்தினால் உயிர் நீத்த மக்களை நினைவு கூறும் வகையில் அனைத்து இலங்கையர்களும் சகல அரச திணைக்களங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியிருந்தது. இதற்கமையவே நாடு முழுவதிலும் இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நிகழ்வு காலி மாவட்டத்தில் பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூபிக்கு அருகில் காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் பாதுகாப்பு படையினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு மலர்வலயங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.  

இதுதவிர நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் மாவட்ட மட்டத்திலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலைய அலுவலகங்களில் ஊடாக இன்றைய தினம் ஞாபகார்த்த  தின நிகழ்வுகள் மற்றும் சமய அனுஷ்டானங்களும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகளும் மாவட்ட செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி காலை சுமார் 8 மணியளவில் முதலாவது சுனாமி பேரலை இலங்கையைத் தாக்கியது. இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் 9.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் சுனாமி பேரலை உருவாகியதுடன் அது இலங்கையையும் தாக்கியது. இந்த சுனாமி பேரலை தாக்கத்தினால் சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன் பல மில்லியன் கணக்கான சொத்துக்களும் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.