logo

ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கக் கூடிய நாட்டை உருவாக்கவே அரசு விரும்புகிறது - பாதுகாப்பு செயலாளர்

ஜனவரி 01, 2020

ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கக் கூடிய நாடொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்க வேண்டிய தேவை அரசுக்குள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றத்துக்காக அரச ஊழியர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டி உள்ளதால் அவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்தார்.

புத்தாண்டின் முதல் நாளான இன்று அமைச்சின் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் அமைச்சின் ஊழியர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் ஊழியர்கள் பாரிய பொறுப்புகளை சுமந்துள்ளனர். எனவே தான் ஜனாதிபதி; பல்வேறு முக்கிய அரச நிறுவனங்களை இந்த அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளார். ஜனாதிபதி எம்மீது கொண்ட நம்பிக்கை காரணமாக வழங்கிய இந்த பாரிய பொறுப்பை   நிறைவேற்ற நாம் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி அளித்தவாறு நாடு தொடர்பில் தூர நோக்குடன் செயல்படுகிறார். இந்த தொலைநோக்கின் கீழ் எமக்கு அதிக பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பண்டைய மன்னர்கள், போர் வீரர்கள் மற்றும் தேசத்தலைவர்கள் இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி தியாகங்கள் புரிந்து பாதுகாத்த இத்தேசத்தினை அபிவிருத்தி செய்ய அரச ஊழியர்கள் ஆகிய நாம் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் தலைமையில் இடம் பெற்றது. மகா சங்கத்தினரின் சமய அனுஷ்டானங்கள் உடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தாய் நாட்டுக்காக உயிரி தியாகம் செய்த  படைவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அமைச்சின் ஊழியர்களினால் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், வேறு அரச நிறுவனங்களை போல் அல்லாமல் பாதுகாப்பு அமைச்சுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது ஜனாதிபதி ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் என தெரிவித்தார்.

மேலும், தனிப் பட்ட சிரமங்களை பொருட்படுத்தாமல் விரும்பிய முடிவுகளை அடைய மேலதிக முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் மேலதிக சவாலை ஏற்றுக் கொள்ள நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்த்த காலப்பகுதியில் தமக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற ஊழியர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எமது செயல்திறன் மற்றும் வெற்றியானது, பரஸ்பர ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றினால் மட்டுமே அடைய முடியும் எனவும் படையினரிடையே நிலவிய ஒற்றுமை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு காரணமாகவே போரினை எம்மால் வெற்றிகொள்ள முடிந்தது. இது மூன்று தசாப்தகால போரினை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்து தாய்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் இணக்கமான சூழலை ஏற்படுத்துவதற்கும் வழிகோலியது என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் காலத்தில் பாதுகாப்பு அமைச்சு நாட்டின் முன்மாதிரியான மற்றும் அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனமாக திகழ்ந்தது. அந்த மகிமையை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கொண்டுவர தான் விரும்புவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலுக்கு அமைய அமைச்சின் ஊழியர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சுக்குள் பரஸ்பரம் ஒத்துழைக்கும் கலாச்சாரத்தை உருவாக்குவது அவசியம் என தெரிவித்த அவர் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சின் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.