--> -->

பொதுமக்கள் பீதியடைவதற்கும் பொருட்களை சேமித்து வைப்பதற்குமான தேவை கிடையாது – அரசாங்கம் தெரிவிப்பு

மார்ச் 12, 2020

• அவசர கால நிலை பிரகடனப்படுத்தப் படும்போது  பொருட்களை இருப்பில் வைத்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அரசு முன்கூட்டியே தெரியப்படுத்தும்

• வீடு வீடாக தனிமைப்படுத்த எந்த திட்டமும் இல்லை

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்களை  கண்டறிய வீடு வீடாக தனிமைப்படுத்தப்படும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக  சில வதந்திகள் எழுந்ததையடுத்து,  அச்சம் காரணமாக பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து பொதுமக்கள் தொகையாக பொருட்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான நிலைமைகள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் பொதுமக்கள் அச்சமடையவோ அல்லது தொகையாக பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்ளவோ வேண்டாம்   என அரசாங்கம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

சர்வதேச அளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணாமாக தொற்றுக்குள்ளானவர்கள் இருவர் இன்று இலங்கையில் அடையாளங்காணப்பட்டதையடுத்து பரவிய  சில போலியான செய்திகள்  மற்றும் வதந்திகள் காரணமாக எழுந்த பீதியினால்,  பல்பொருள் அங்காடிகள் மற்றும் இதர சில்லறை விற்பனை நிலையங்களில் உலர் உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய அவசியமான  பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் விரைந்து வருகின்றனர்.

'பெருந்தொகையான பொருட்களை கொள்வனவு செய்யும் இந்த திடீர் செயற்பாட்டின் காரணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது தொடர்பாக நாட்டு மக்களிடம் விஷேட வேண்டுகோள் விடுத்ததாகவும் வீடு வீடாக தனிமைப்படுத்தும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான எந்தவொரு முடிவையும் அரசாங்கம் எடுக்காத நிலையில், பொதுமக்கள் வீணாக பீதியடைய தேவை இல்லை என பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மக்கள் திடீரென உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் கொள்வனவு செய்யும்போது, அது பல்பொருள் அங்காடிகளில் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு பற்றாக்குறையை ஏற்படுத்தும், பொதுவாக பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு   போதுமான பொருட்களையே இருப்பு வைத்துகொள்வார்கள் என  ஜெனரல் ஷவேந்திர சில்வா பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால் , அரசாங்கம் தேவையான பொருட்களை சேகரித்து வைக்குமாறு  என்று முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிக்கும் எனஅவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளானவர்கள் இருவர் மட்டுமே இன்று இலங்கையில் அடையாளங்காணப்பட்ட நிலையில்  வீடுகளில் அத்தியாவசிய பொருட்களை  இருப்பு வைத்து கொள்ளுமளவிற்கு பொதுமக்கள் பீதியடைய தேவை இல்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.