--> -->

விடுமுறை நாட்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களிலிருந்து தவிந்து கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை

மார்ச் 18, 2020

புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது நோயாளிகள் உள்ளடங்கலாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  இன்று 50 ஆக உயர்ந்துள்ள நிலையில், வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸைத் தடுக்க  விடுமுறை நாட்களில் சுற்றுப்பயணங்கள் மற்றும் யாத்திரைகளில் ஒன்று சேர்வதை  தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை  தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் , இராணுவத் தளபதியும், கொரோனா வைரஸ் பரவலை  தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கொரோனா வைரஸ்  பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக  குறிப்பிட்டார்.

இப்போது இந்தியாவில் இருக்கும் இலங்கை யாத்ரீகர்கள் குழு நாட்டிற்கு திரும்புவதற்கு வசதி செய்யப்படும் எனவும் அவ்வாறு திரும்பிய  அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும்  அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்காக இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டினரும் நாட்டிற்குள் தங்கள் நகர்வுகளைக் குறைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும்  ஹோட்டல் உரிமையாளர்கள், உணவகங்கள் மற்றும் வெளிநாட்டினர் வசிக்கும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வெளிநாட்டவர்கள் தங்கள் பயணங்களை மட்டுப்படுத்த  அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் 'எனவும்  அவர் கேட்டுக்கொண்டார்.

14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட 2,287 சந்தேக நபர்களில் 21 வெளிநாட்டினரும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 19 நபர்களும் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

 “ இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே இலங்கைக்கு வருவதற்கு முன்பே தொற்றுக்குள்ளானவர்கள் எனவும்  வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த நபர்களை தமது வீடுகளில்  தனிமைப்படுத்தும் பணியின் கீழ் வைக்க அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கமைய இதுவரை 4,000 க்கும் அதிகமானவர்கள்  பொலிஸ் நிலையங்களில்  பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சு  மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக  விளக்கமளித்த சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகம்  டொக்டர் அனில் ஜெயசிங்க, பொலிமரஸ் செயின் ரியாக்ஷன் (Polymerase Chain Reaction) பரிசோதனையை நிபந்தனைகளின் கீழ் மேற்கொள்ள  தனியார் மருத்துவமனைகளை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

"அனுமதிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலைகளில்  மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நோயாளர்களுக்கு அவர்களின்  பரிசோதனை முடிவுகளை 24 மணித்தியாலங்கலுக்குள் வழங்குவது கட்டாயம் என தெரிவித்த அவர், இச்சோதனைக்காக தனியார் வைத்தியசாலைகள்  ரூபா 6,000 அறவிட வேண்டும் என   அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

அன்றாடம் உழைத்து சாப்பிடும் சாதாரண மற்றும் வரிய மக்களை தேவையற்ற கஷ்டங்ளுக்கு உட்படுத்தும் வகையில் முடக்கிவைக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என்பதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இதன்போது தெரிவித்தார்.

"கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ நிபுணத்துவம் மற்றும் வசதிகள் தயாராக இருப்பதோடு மட்டுமல்லாமல், சில மாவட்டங்களில் 12 வைத்தியசாலைகள்  தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன," என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், இன்று மாலை 4.30 மணி முதல் புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை ஆகிய இடங்களில் போக்குவரத்து மற்றும் நடமாட்டங்களை கட்டுப்படுத்தும்வகையில் பொலிஸாரினால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், புத்தளம், ஆனாமடுவ, கல்பிட்டி, கருவலகஸ்வெவ, முண்டலம, நவகத்தேகம, பல்லாம, வனாத்தவில்லுவ, உடப்புவ, நொரச்சோலை மற்றும் புத்தளம் பிரிவிலுள்ள சாலியாவெவ பொலிஸ் பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலாபம் பொலிஸ் பிரிவிலுள்ள, தங்கொட்டுவ, கொஸ்வத்த, மாதம்பே, மராவில, வெண்ணாப்புவ மற்றும் ஆரச்சிகட்டுவ ஆகிய பொலிஸ் பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.