நன்றியின் வெளிப்பாடு
மே 11, 2025பிரியாவிடை அணிவகுப்பு ஒத்திகையின் போது 2025 மே 9 திகதி அன்று மாதுறுஓயா சிறப்புப் படை முகாமில் இடம்பெற்ற பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளுக்கு உதவிய பிரதேச மக்கள், அரளகன்விளை பிரதேச வைத்தியசாலை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்கள், பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் அம்புலன்ஸ் சேவை பணியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த சோககரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மீட்பு மற்றும் மருத்துவ சேவையை உறுதி செய்வதில் சம்பந்தப்பட்ட அனைவரின் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சி முக்கிய பங்கு வகித்தது. மாதுருஓயா மக்களின் அர்ப்பணிப்பு மிக்க ஆதரவை அமைச்சு விசேடமாக பாராட்டுகிறது, அவர்களின் உடனடி மற்றும் தன்னலமற்ற உதவிகள் ஆயுதப்படைகளுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான ஆழமான ஒற்றுமை உணர்வை எடுத்துக்காட்டுகின்றன மேலும் இராணுவ வீரர்களுக்கும் சிவில் சமூகத்திற்கும் இடையிலான சிறந்த உறவையும் கோடிட்டுக் காட்டுகிறது. அத்துடன் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கும் வழங்கப்பட்ட அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகிறது.
அத்துடன் இந்த அமைச்சு, பொலன்னறுவை வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறைத்தன்மையை பாராட்டுவதுடன், அவசரகால நடவடிக்கைகளின் போது அவர்களின் நிபுணத்துவம் காயமடைந்தவர்களுக்கு அவசியமான உடனடி சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்தது. அவசரகால தீயணைப்பு மற்றும் அம்புலன்ஸ் சேவைகளின் பணிகளும் பாராட்டத்தக்கவை, அவர்களின் விரைவான தலையீடு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை நன்கு ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்துதல் ஆகியவை அவசரநிலையை திறம்பட நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகித்தன.
மீட்பு நடவடிக்கையில் பங்களித்த அனைவரின் கூட்டு அர்ப்பணிப்புக்கும் பாதுகாப்பு அமைச்சு, மற்றும் முப்படையினர் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களின் சேவை , ஒற்றுமை மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.