திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பார்வையிட்டார்
மே 28, 2025இலங்கை கடற்படையினரால் (SLN) கைப்பற்றப்பட்ட ஒரு தொகை போதைப்பொருட்களைபார்வையிடுவதற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (மே 28) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் செய்தார்.
ஒரு கூட்டு நடவடிக்கையில், பெருமளவு ஐஸ் மற்றும் ஹெராயின் போதைபொருற்களை கடத்த முயன்ற இரண்டு உள்ளூர் மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, படகுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பிரதி அமைச்சரை வரவேற்று இந்நடவடிக்கை தொடர்பில் அவருக்கு விளக்கமளித்தார். அரச புலனாய்வு சேவை, பொலிஸ் போதைப்பொருள் பணியகம் (PNB) மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு செயல்பாட்டு நிலையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது விஜயத்தின் போது ஊடகங்களுக்கு உரையாற்றிய பிரதி அமைச்சர், போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் இலங்கை கடற்படை, புலனாய்வு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட அயராத முயற்சிகளைப் பாராட்டினார். "இந்த நடவடிக்கை நமது பாதுகாப்புப் படையினருக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த முயற்சிகளின் வலிமையைப் பிரதிபலிக்கிறது. போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நபர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
வேலைபார்க்கும் பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
                                       
                                       
                                       
                                       
                                       
                                       
                                       
                                       
                                       
                                       
                                      