பாதுகாப்பு பிரதி அமைச்சர் நாரஹென்பிட்டி இராணுவ மருத்துவமனைக்கு விஜயம்
செப்டம்பர் 09, 2025பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சமீபத்தில் (செப்டம்பர் 3) நாரஹென்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு வருகை தந்த பிரதி மைச்சரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அன்புடன் வரவேற்றார்.
இராணுவ வீரர்கள், மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த விஜயம் அடிக்கோடிட்டுக் காட்டியது. மருத்துவமனையின் தற்போதைய நிலை, அதன் நீண்டகால தொலைநோக்கு மற்றும் மருத்துவ வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதாழ் குறித்து இந்த விஜயத்தின் போது ஒரு விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இராணுவ மருத்துவமனையின் இயக்குநர் பிரிகேடியர் சஞ்சீவ தொடங்கொட, மருத்துவமனையின் தற்போதைய சேவைகள், செயல்பாட்டுத் திறன்கள் மற்றும் அதிகரித்து வரும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எதிர்கால விரிவாக்கத்திற்கான திட்டங்கள் தொடர்பில் விரிவான விளக்கத்தை வழங்கினார்.
பிரதி அமைச்சர் மருத்துவமனையில் சேவையாற்றும் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களைப் பாராட்டி இராணுவ உறுப்பினர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதில் அவர்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். உயர் தர சேவை வழங்கலைப் பராமரிக்க சுகாதார உள்கட்டமைப்பு, மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை பயிற்சியில் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.
மேம்பட்ட சுகாதார வசதிகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மூலோபாய திட்டமிடல் மூலம் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை இந்த விஜயம் பிரதிபலிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.