சைபர் பாதுகாப்பு கட்டளை பிரிவினால் அரச நிறுவனங்களுக்கான சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
ஒக்டோபர் 16, 2025சைபர் பாதுகாப்பு கட்டளை பிரிவினால் பொது பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த துறைகளின் அதிகாரிகளுக்கான சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அக்டோபர் 15 (2025) அன்று பத்தரமுல்லையில் உள்ள “சுஹுருபாய”வில் நடத்தப்பட்டது.
பொது நிறுவனங்களில் ஒருமைப்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் “Clean Sri Lanka” திட்டத்திற்கு அமைவாக, பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரிகேடியர் தம்மிக்க விதானலாகே, (சைபர் பாதுகாப்பு கட்டளை இயக்குநர்), கேர்ணல் தர்ஷன முத்துகல (கேர்ணல் பொது பணியாளர்), லெப்டினன்ட் கேர்ணல் பண்டார ஹேரத், (பிரிவுத் தலைவர்), மேஜர் சன்துன் குணவர்தன (சட்ட அதிகாரி), லெப்டினன்ட் கமாண்டர் மேஷெக் ஹேவாவசம் (சைபர் பொறியாளர்) மற்றும் அப்பிரிவின் பணியாளர்கள் உட்பட பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு சைபர் கட்டளை பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியை கொண்டு நடத்தினர்.
பொது பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், வெளியுறவு அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, பதிவாளர் நாயகம் திணைக்களம், எல்லை இடர் மதிப்பீட்டு மையம் (BRAC), தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் (INSS), இலங்கை பொலிஸ் (பொலிஸ் ஊடகம், அனுமதிப் பிரிவு மற்றும் 118 பிரிவு உட்பட) ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள, தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் பொறியியல் சேவைகள் பிரிவின் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தல்கள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சைபர் பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகள் குறித்த நேரடி செயல் விளக்கங்கள் உட்பட நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. முக்கியமான தேசிய தகவல் உள்கட்டமைப்பை (CNII) பாதுகாப்பதில் சைபர் காப்பு, பாதுகாப்பான தகவல் முகாமைத்துவம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
சைபர் பாதுகாப்பு கட்டளை பிரிவு, பொதுத்துறையின் சைபர் பாதுகாப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்த அரசாங்க அமைச்சுகள் மற்றும் ஏனைய துறைகள் முழுவதும் இதேபோன்ற நிகழ்ச்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது பாதுகாப்பான மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தலில் இலங்கையின் தேசிய நோக்கங்களை அடைய உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.