இலங்கை விமானப்படை 3 ஆவது கடல்சார் படைப்பிரிவுக்கு
ஜனாதிபதியின் வர்ணம் வழங்கப்பட்டது

ஒக்டோபர் 19, 2025
  • திருகோணமலையில் நடந்த விமானப்படை அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

இலங்கை விமானப்படைக்கும் நாட்டிற்கும் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டும் விதமாக இலங்கை விமானப்படையின் 3ஆம் இலக்க கடல்சார் படைப்பிரிவுக்கு ஜனாதிபதி வர்ணம் வழங்கப்பட்டது. 

சீனக்குடா விமானப்படை கலாசாலையில் நேற்று (அக்டோபர் 18) நடைபெற்ற ஜனாதிபதி வர்ண விருது மற்றும் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பின் போது, அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க வரவேற்றார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில், 66, 67 மற்றும் 68 வது கெடெட் அதிகாரி ஆட்சேர்ப்பு, 20 வது பெண் அதிகாரி கெடட் ஆட்சேர்ப்பு, 38 மற்றும் 39 வது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) கெடட் ஆட்சேர்ப்பு ஆகியவற்றிற்கான சம்பிரதாயபூர்வ பிரியாவிடை அணிவகுப்பும் இடம்பெற்றது. இலங்கை விமானப்படையின் மொத்தம் 66 கெடெட் அதிகாரிகள் அதிகாரம் பெற்றதுடன் 103 வது விமானபடை கெடெட் பாடநெறியைச் சேர்ந்த நான்கு விமான அதிகாரிகளுக்கு இலச்சினைகள் வழங்கப்பட்டது. பயிற்சியின் போது சிறந்த திறமை காட்டிய அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

இதனுடன் விமானப்படைக்கு 14ஆவது ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ஷல் ஒப் எயார்போஸ் ரொஷான் குணதிலக்க, கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள், சிரேஷ்ட பிரதி பொலிமா அதிபர் -கிழக்கு, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் மற்றும் புதிதாக பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.