மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்காக முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட
முகாமைத்துவ முறையை பின்பற்ற பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

நவம்பர் 19, 2025

செயல்திறனை மேம்படுத்துவதற்கான முற்போக்கான நடவடிக்கையாக, முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவ (RBM) நிறுவனமயமாக்கல் குறித்த சிறப்பு அமர்வு கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் (MOD) நடைபெற்றது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம் அனைத்து அரச நிறுவனங்களிலும் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பரந்த சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுடன் ஒன்றிணைந்ததாக நடைபெற்றது.

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) இதில் கலந்து கொண்டார்.

 தடைகளை நீக்கி, அரசு நிறுவனங்களை முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கருத்தின் கீழ் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது.

அமைச்சுகள் முழுவதும் இந்த RBM மாதிரி அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதனை விரைவில் செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். அத்துடன் ஒழுக்கம், சேவை தரம் மற்றும் பொது திருப்தியை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், தேசிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் அதன் முக்கிய பங்கு காரணமாக மக்கள் அமைச்சின் செயட்பாடுகளை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டார்.

RBM-ஐ செயல்படுத்துவது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்புத் துறையில் ஒழுக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் மூலோபாய திட்டமிடலையும் மேம்படுத்தும் என்று பிரதி அமைச்சர் ஜயசேகர தெரிவித்தார். இந்த அமைச்சின் மீது பொதுமக்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருப்பதாகவும், செயல்திறன் சார்ந்த நிர்வாக மாதிரிகளை ஏற்றுக்கொள்வதில் முன்மாதிரியாக வழிநடத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிறுவன செயல்திறனைத் தடுக்கும் தடைகளை அடையாளம் கண்டு அகற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இது அமைச்சின் அனைத்து துறைகளிலும் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல், ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் சரியான நேரத்தில் சேவை வழங்குவதை உறுதி செய்வதற்கு மிகவும் முக்கியமானது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), கூட்டத்தில் உரையாற்றுகையில், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். பாதுகாப்பு அமைச்சின் உள்ளே மேம்படுத்தப்பட்ட செயல்திறன் பரந்த பொதுத்துறைக்கு ஒரு அளவுகோலை அமைக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இக் கூட்டத்தில் முப்படைத் தளபதிகள், மேலதிக செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ மற்றும் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.