தேசிய பாதுகாப்பு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது

நவம்பர் 27, 2025

தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) பாடநெறி எண் 4 இன் பட்டமளிப்பு விழா இன்று (நவம்பர் 27) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) பட்டக்கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

நிகழ்விற்கு வருகைதந்த பிரதி அமைச்சரை NDC யின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க வரவேற்றார்.

இந்த பாட்டமளிப்பு விழாவில், இந்தியா, பங்களாதேஷ், சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் உட்பட முப்படை மற்றும் பொலிஸை சேர்ந்த 41 அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் பட்டங்களை வழங்கி வைத்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் உச்ச நிறுவனமாகவும், இராணுவக் கற்றலின் மிக உயர்ந்த இடமாகவும் NDC கருதப்படுகிறது.

இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர், அனைத்து குடிமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும், சமூக ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். ஒவ்வொரு சமூகத்தின் உரிமைகளையும் உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும், அமைதியான, உள்ளடக்கிய மற்றும் சட்டபூர்வமான அரசியல் செயல்முறைகள் மூலம் சிக்கல்களை தீர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஒரு நிலையான ஆட்சி, அதிகாரத்திற்கான போட்டியை ஜனநாயக ரீதியாகவும் வன்முறையற்ற முறையிலும் நிர்வகிக்க அனுமதிக்கிறது என்பதை எடுத்துரைத்த அவர், அத்தகைய சூழல், நீண்டகால வளர்ச்சி மற்றும் மூலோபாய பாதுகாப்பை நோக்கி செல்ல நாட்டிற்கு உதவுகிறது என்று குறிப்பிட்டார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்கள், நிதி ஒருங்கிணைப்பு முயற்சிகள் மற்றும் நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கடல்சார் விடயத்தில் குறிப்பாக முக்கியத்துவம் உள்ளிட்ட மூலோபாய தொலைநோக்கு பார்வை மூலம் இந்த விடயங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தனது சொந்த அனுபவத்திலிருந்து எடுத்துக்காட்டி, நல்லாட்சி இல்லாத போது அது பாதுகாப்பு மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று அவர் வலியுறுத்தினார். நாட்டைப் பாதுகாப்பதற்கும் அதன் அபிலாஷைகளை அடைவதற்கும் வலுவான நிர்வாகம் அவசியம் என்பதையம் அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், இராஜதந்திரிகள், முன்னாள் முப்படை தளபதிகள், KDU இன் துணைவேந்தர், சிரேஷ்ட முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.