ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மனிதாபிமான உதவி: அனர்த்த நிவாரணத்துக்காக C-17 விமானம் இலங்கையை வந்தடைந்தது

டிசம்பர் 03, 2025

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) வான் படையின் C-17 விமானம், நேற்று (02 டிசம்பர்) அனர்த்த நிவாரண மனிதாபிமான உதவிப் பொருட்களின் ஒரு தொகுதியுடன் இலங்கையை வந்தடைந்தது. 

இந்த உதவிப் பொருட்கள் அடங்கிய விமானம், இலங்கைக்கான UAE தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை வான்படை பிரதிநிதிகளால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வரவேற்கப்பட்டது.

76 உறுப்பினர்களைக் கொண்ட அமீரக மனிதாபிமான நிவாரணக் குழுவால் கொண்டுவரப்பட்ட இந்த நிவாரண உதவியில் உணவுப் பொருட்கள், பாதுகாப்பு கருவிகள் மற்றும் கூடாரங்கள் உள்ளிட்ட அவசியமான நிவாரணப் பொருட்கள் அடங்கின. 

இந்த உதவி பொருட்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி விநியோகத்திற்காக அதிகாரப்பூர்வமாக இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

நாடு முழுவதும் நடைபெறும் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்காக தொடர்ந்தும் உறுதியான ஆதரவை வழங்குவோம் என UAE அதிகாரப்பூர்வமாக தனது உத்தரவாதத்தை தெரிவித்துள்ளது. இவ்வேகமான மனிதாபிமான நடவடிக்கை, உலகளாவிய ஒற்றுமைக்கான UAE-யின் அர்ப்பணிப்பின் சான்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது