இந்தியா தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளை அனுப்பி இலங்கையின்
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி
டிசம்பர் 03, 2025
பிராந்திய கூட்டாண்மைக்கான ஆழமான அர்ப்பணிப்பையும் விரைவான செயல்திறனையும் வெளிப்படுத்தும் வகையில், சமீபத்திய கடுமையான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையை சமாளிக்க இலங்கையின் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, இந்திய கடற்படை பல கப்பல்களின் மூலம் மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
இதற்கமைய முதலாவது நிவாரணப் பொருட்கள் 2025 நவம்பர் 28ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தன. சர்வதேச கப்பல் அணிவகுப்பு விழாவில் (International Fleet Review) பங்கேற்ற INS Vikrant விமானம் தாங்கி கப்பல் மற்றும் INS Udaygiri ஆகியவற்றின் மூலம் அவை கொண்டு வரப்பட்டன. இந்த ஆரம்ப உதவிகள் கடுமையான வானிலையால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உதவியது.
நிவாரண செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், INS Sukanya 2025 டிசம்பர் 01ஆம் திகதி மேலதிக அத்தியாவசியப் பொருட்களுடன் இலங்கையை வந்தடைந்தது. இது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரமாக தேவைப்படும் பொருட்களை தொடர்ந்து வழங்குவதற்கு முக்கிய பங்களிப்பை அளித்தது. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
நிவாரணப் பொருட்கள் கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகப் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.