மோசமான வானிலைக்கு மத்தியில் பாக்கிஸ்தான் கடற்படை
இலங்கைக்கு மனிதாபிமான உதவி வழங்கியது
டிசம்பர் 03, 2025
பிராந்திய ஒத்துழைப்பையும் மனிதாபிமான ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, சமீபத்திய கடுமையான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்க பாக்கிஸ்தான் கடற்படை குறிப்பிடத்தக்க அனர்த்த நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. இந்த நிவாரணப் பொருட்கள் சர்வதேச கப்பல் அணிவகுப்பு விழாவில் (International Fleet Review) பங்கேற்க கொழும்பில் இருந்த PNS SAIF கடற்படை கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டன. மனிதாபிமான உதவி 2025 நவம்பர் 28ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. இது நாட்டின் மிக அவசர காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த உதவியாகும்.
இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தின் ஒருங்கிணைப்பில் இக்கையளிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேற்குக் கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார மற்றும் PNS SAIF கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் அஸ்பந்த் பர்ஹான் கான் ஆகியோர் முன்னிலையில் இந்த நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. இந்த மனிதாபிமான உதவி, இரு கடற்படைகளின் பரஸ்பர ஆதரவு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் ஒன்றிணைந்த அனர்த்த மீட்பு முயற்சிகளுக்கான அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.