இலங்கையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவி
டிசம்பர் 04, 2025கடுமையான மோசமான வானிலை காரணமாக தேசிய அளவில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின் மேட்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுமுகமாக ஜப்பான் வழங்கிய ஒரு தொகுதி மனிதாபிமான உதவி பொருட்கள் இன்று (04 டிசம்பர்) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து அதிகாரப்பூர்வமாக இலங்கைக்கு கையளிக்கப்பட்டது.
இந்த நன்கொடையை இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் அதிமேதகு Akio ISOMATA மற்றும் இலங்கை JICA நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி Kenji Kuronuma, பாதுகாப்புத் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவிடம் (ஓய்வு) அதிகாரப்பூர்வமாக கையளித்தனர்.
ஜப்பான் தூதுவர் Akio ISOMATA, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான வலுவான இருதரப்பு உறவை மீண்டும் வலியுறுத்தி, சவாலான நேரங்களில் ஜப்பான் இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். இந்த மனிதாபிமான உதவி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பரஸ்பர நற்பு மற்றும் ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நன்கொடையை ஏற்றுக்கொண்ட பாதுகாப்புத் பிரதி அமைச்சர் மிகவும் அவசியமான தருணத்தில் வழங்கப்பட்ட இந்த ஆதரவுக்கு ஜப்பான் அரசு, JICA மற்றும் ஜப்பான் மக்களுக்கு ஆழ்ந்த நன்றியை தெரிவித்தார். மேலும், ஜப்பான்–இலங்கைக்கு இடையிலான நிலையான நட்பை வலியுறுத்தி, முக்கியமான மனிதாபிமான சூழ்நிலைகளில் ஜப்பான் தொடர்ந்து வழங்கிவரும் உதவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு), ஜப்பான் தூதரக, JICA, DMC, உட்பட இலங்கை விமானப்படை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்த மனிதாபிமான உதவி அனர்த்த நிவாரணம், மனிதாபிமான சேவை மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜப்பான் வழங்கிய மற்றொரு முக்கியமான நட்புறவின் அடையாளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.