வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்பு முன்னேற்றத்தை
உயர்மட்டக் குழு மதிப்பாய்வு செய்தது

பெப்ரவரி 27, 2026

வெளிநாட்டு நிவாரண உதவி (பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழு (HL-FRAC) நேற்று (26 பெப்ரவரி) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் கொழும்பிலுள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் மீண்டும் கூடியது.

வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட அனர்த்த நிவாரண உதவிப் பொருட்களை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு விநியோகிக்கும் நடைமுறை தொடர்பான முன்னேற்றம் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் செயல்திறன் ஆகியவை கலந்துரையாடல்களின் மையமாக அமைந்தன.

நிவாரணப் பொருட்கள் விநியோகம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக குழு உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். மீதமுள்ள கட்டங்களிலும் நடைமுறைச் சீர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதன் அவசியம் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

களஞ்சியங்களில் இருப்பில் உள்ள பொருட்கள் தொடர்பாகவும் மேலதிக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. நிறுவனங்களின் தேவைகளை அடையாளம் கண்டு, பொருட்களை தகுந்த முறையில் விரைவாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். மேலும், வெளிநாட்டு நிவாரணப் பொருட்களின் பெறுதல், சேமித்தல் மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்த உருவாக்கப்பட்ட தரவு முகாமைத்துவ முறைமையில் துல்லியதன்மையை உறுதிப்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. தரவு நம்பகத்தன்மையை பேணுவதற்காக அவசியமான கணக்காய்வுகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும், அனர்த்த நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து கிடைத்த சிறப்பு உபகரணங்கள் மற்றும் பொருட்களை செயல்பாட்டு பயன்பாட்டிற்காக முப்படைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், நிவாரணப் பொருட்கள் விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைத்து தரப்புகளினதும் வலுவான ஒருங்கிணைப்பு அவசியம் என வலியுறுத்தினார். வெளிநாட்டு அனர்த்த நிவாரண உதவிகளை முகாமை செய்வதில் செயல்திறன், பொறுப்புணர்வு மற்றும் உடனடி பதிலளிப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளது என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.