பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவு வரவேற்பு விழாவில் பங்கேற்றனர்
மார்ச் 04, 2026இலங்கை விமானப்படை (SLAF) தேசத்திற்கு ஆற்றிய பல தசாப்த கால சேவையை நினைவுகூரும் வகையில், அதன் 75வது ஆண்டு நிறைவு வரவேற்பு நிகழ்வை நேற்று (மார்ச் 03) நடத்தியது. அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தேசப்பற்றுடன் சேவையாற்றிய விமானப்படை வீரர்களின் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டாடும் வகையில், அத்திடியவில் உள்ள 'Eagles’ Lakeside' மண்டபத்தில் நேற்று மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) இதில் கலந்து கொண்டார்.
நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்களை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் திருமதி கிரிஷாந்தி எதிரிசிங்க ஆகியோர் வரவேற்றனர்.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இலங்கை விமானப்படையின் வரலாற்றுப் பின்னணி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் அவர்களது இணையற்ற தியாகங்களைச் சித்தரிக்கும் ஒரு உணர்ச்சிகரமான தொடக்கக் காட்சியுடன் (Curtain Raiser) நிகழ்வு ஆரம்பமானது. 75வது ஆண்டு நிறைவு கேக் வெட்டப்பட்டதைத் தொடர்ந்து, விமானப்படையின் 75 ஆண்டுகால பரிணாமம் மற்றும் வான்வழிச் சிறப்புகளைப் புகைப்படங்கள் ஊடாக விவரிக்கும் "Legacy Above Clouds" எனும் நினைவு நூல் (Coffee Table Book) வெளியிட்டு வைக்கப்பட்டமை இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும். இறுதியாக, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களினால் வான்பரப்பைப் பாதுகாக்கும் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால வீரர்களைக் கௌரவித்து பாரம்பரிய வாழ்த்து (Formal Toast) வழங்கப்பட்டது.
Marshal of the Air Force ரொஷான் குணதிலக்க, இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் மற்றும் அவர்களது துணைவியர், முன்னாள் விமானப்படைத் தளபதிகள், ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், விமானப்படை நிர்வாகக் குழு உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள்உட்பட விமானப்படையின் பல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.