இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிப்பு

டிசம்பர் 08, 2021

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலன்புரி சேவைகளின் ஒரு பகுதியாக வவுனியாவில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று அன்மையில் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கமைய, வீட்டின் பயனாளியான வவுனியா சாஸ்திரிகுளத்தில் வசிக்கும் திரு.கோவிந்த சாந்த வடிவேல் என்பவருக்கு புதுமனை குடிபுகு விழாவின் போது வீட்டின் சாவி வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டினை நிர்மாணிப்பதற்கான நிதி உதவி கொழும்பு சர்வதேச விபாசனா தியான நிலைய வண. உடுதும்பர சோபித தேரரினால் வழங்கப்பட்ட அதேவேளை, ஆளணி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வன்னி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்கவின் பணிப்புரைக்கமைய15வது (V) இலங்கை சிங்கப் படைப்பிரிவு படையினரால் வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டுதலுடன் இடம்பெற்ற இந்த புதுமனை குடி புகுவிழாவில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டதா இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.