--> -->

நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிவரும் பங்களிப்புக்களை பாதுகாப்புச் செயலாளர் பாராட்டினார்

நவம்பர் 10, 2022

நாட்டில் நாம் இன்று அனுபவித்து வரும் சமாதானத்தை நிலைநாட்டுவதில் முப்படையினர் மற்றும் பொலிஸார் மாத்திரமன்றி சிவில் பாதுகாப்பு திணைக்களமும் பெரும் பங்களிப்பை வழங்கியதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். மொரட்டுவ கட்டுபெத்தவில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு இன்று (நவம்பர் 10) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்த பாதுகாப்பு செயலாளர், அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு) தலைமையிலான சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. அத்துடன் தனது விஜயத்தை நினைவுகூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மரக்கன்று ஒன்றிணையும் நாட்டினார்.

 சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், யுத்தத்தின் போது சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் எதிர்கொண்ட கடினமான அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர் மேற்படித் திணைக்களத்தின் முன்னாள் உறுப்பினர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புடனான சேவையையும் பாராட்டினார்.

 அன்மையில் ஏற்பட்ட சம்பவங்களின் போது பாதுகாப்பு படைகளை நோக்கி விரல் நீட்டியவர்கள், பயங்கரவாதப் போரின் போது தங்கள் பெற்றோர்கள் பட்ட கஷ்டங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று அன்மைய பல சம்பவங்களை மேற்கோள்காட்டி பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும் நீங்கள் இந்த தனித்துவமான சீருடையை அணிவதில் பெருமையடைகிறீர்கள் என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், இன்று நாம் அனுபவிக்கும் அமைதியான சூழல் எமக்கு மாத்திரமல்ல வளரும் எதிர்கால சந்ததியினருக்கானது என்பதை மனதில் கொள்ளுமாறும் தெரிவித்தார்.
 
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மேலதிக செயலாளர் திரு.சமன் திஸாநாயக்க, இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.